திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியின் கால் கட்டை விரலை எலி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ் கொடி (60). எலும்பு மூட்டு சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ வார்டில் எலித் தொல்லை வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணி அளவில் இவரது படுக்கைக்கு வந்த எலி ஒன்று, தமிழ் கொடியின் கால் கட்டை விரலைக் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியைப் பரிசோதித்துத் தேவையான தடுப்பூசியைச் செலுத்தினர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன் விஜயகுமார் கூறுகையில், அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. எனது தாய் சர்க்கரை நோயாளி என்பதால், அவரது காலில் எலி கடித்தது உடனடியாக அவருக்குத் தெரியவில்லை. தற்போது அவரது கட்டை விரலைச் சுற்றி மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் முழுப் பொறுப்பேற்று, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version