உலகெங்கும் நிலவும் பருவநிலை மாற்றங்களைக் கண்காணிக்கும் உலக வானிலை அமைப்பு (WMO), வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை உருவாவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளதாகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது வரும் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் 90%-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், அதன் வழக்கமான வெப்பநிலையை விட மிக அதிகமாக வெப்பமடைவதையே விஞ்ஞானிகள் ‘எல் நினோ’ என்று அழைக்கின்றனர். பொதுவாக 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கும் இந்த நிகழ்வு, உலகளாவிய வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு சுழற்சியைப் தலைகீழாக மாற்றி, கடுமையான இயற்கைச் சீற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ‘எல் நினோ’வின் வருகையானது தென்மேற்குப் பருவமழையைப் பலவீனப்படுத்தி, கடுமையான கோடை வறட்சியை ஏற்படுத்தும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தெற்காசியப் பருவமழைக்காலத்தில், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்ய வாய்ப்புள்ளது. நிலப்பகுதிகளிலும், கடற்பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும்.

இந்த விபரீதப் போக்கு குறித்து ஐநா பொதுச்செயலாளர் அந்தோனி குட்ரோஸ் கூறுகையில், “எல் நினோ காலநிலை நமது வாசற்படிக்கு வந்துவிட்டது. இது ஏற்கனவே வெப்பமடைந்து வரும் பூமியின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும். உலக நாடுகள் இதனை ஓர் அவசரநிலை எச்சரிக்கையாகக் கருதி, உடனடியாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், WMO பொதுச்செயலாளர் செலஸ்டி சௌலோ (Celeste Saulo) பேசுகையில், “நாம் மிகக் கடுமையான எல் நினோவிற்குத் தயாராக வேண்டும். கடந்த 2023-24 ஆண்டுகளில் ஏற்பட்ட எல் நினோ தான் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான 5 நிகழ்வுகளில் ஒன்றாகப் பதிவாகி, உலக வெப்பநிலையை உச்சத்திற்குக் கொண்டு சென்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த எல் நினோ தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு, பயிர்ச் சேதம் போன்ற வறட்சி அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால், விவசாயத் துறையும் அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version