அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சேவைகளை தனியார்மயமாக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றிக் கழக அரசு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கிய நிலையில், அதற்கு நேர்மாறாக அரசு சேவைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது சமூகநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தனியார் கூட்டாண்மையில் செயல்படுத்தப்படவுள்ள ஐந்து முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மின்சார பேருந்துகள் இயக்கம், மாணவர் விடுதிகள், கோவை–அரியலூர் மின் வழித்தடம், மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்கள் ஆகியவை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, அரசு போக்குவரத்துக் கழகங்களில் மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் இயக்கும் முறை விரிவுபடுத்தப்பட்டால், எதிர்காலத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அரசு பணியிடங்கள் முற்றிலுமாக குறையும் என்றும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகும் என்றும் அன்புமணி எச்சரித்தார்.
ஏற்கனவே பல்வேறு துறைகளில் அவுட்சோர்சிங் முறை நடைமுறைக்கு வந்திருப்பதாகக் கூறிய அவர், பணியாளர்களின் உழைப்பையும் ஊதியத்தையும் தனியார் நிறுவனங்கள் சுரண்டுகின்றன என்றும், தொழிலாளர் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
மேலும், அரசு சேவைகள் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டால், இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது; சமூகநீதி கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசின் வருவாய் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்த அன்புமணி, உலக வங்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப தனியார்மய நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.
இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் போன்ற சமூகநீதிசார் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும், வேலைவாய்ப்புகளையும் சமூகநீதியையும் பாதிக்கும் தனியார்மய திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள சுமார் 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
