நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள் மீது பைக்கில் வந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அய்யப்பனை, தனிப்படை போலீசார் அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் நெட்டூரைச் சேர்ந்த அய்யப்பன் மீது ஏற்கனவே ஆலங்குளத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் நடந்த தொடர் தாக்குதல் சம்பவங்களுக்குப் பிறகு, அவர் வடக்கு அரியநாயகிபுரம் அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் அதிகாலையில் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அய்யப்பன், தன்னை நெருங்கிய காவலரை திடீரென தன் கைவசமிருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டினார்.

ரவுடியின் இந்த விபரீத தாக்குதலால் சுதாரித்துக் கொண்ட தனிப்படையினர், தற்காப்பு நடவடிக்கையாக அய்யப்பனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்தது. சினிமா காட்சியைப் போல பரபரப்பாக நடந்த இந்த துரத்தல் சம்பவத்தின் முடிவில் அய்யப்பன் சுருண்டு விழுந்தார்.

காயமடைந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அய்யப்பன் மற்றும் ரவுடி வெட்டியதில் காயமடைந்த காவலர் ஆகிய இருவரையும் மீட்ட போலீசார், உடனடியாக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த எம்பவுண்டர் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த காவலரிடம் நலம் விசாரித்தார். பின்னர், இருவருக்கும் மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், அவர்கள் உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

நெல்லை மற்றும் தென்காசியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் மொத்தம் 15 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் இதுவரை அய்யப்பன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் எஞ்சிய 6 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தங்களது தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த அதிகாலை என்கவுண்டர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version