அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக ஏற்கனவே 2 அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதில், குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்
அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தரமான கான்கிரீட் வீடு கட்டி தரப்படும்
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்
சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்
வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் – வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி:
அ) இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
ஆ) மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் திருவருவ சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கட்சி கொடியேற்றி வைத்து கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 3-ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற திமுக அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு கருணைத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
சாலையோர வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
விசைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
