எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகச் சிறைகளில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும், முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் நீண்டநாள் பரோல் மற்றும் கருணை அடிப்படையிலான நிரந்தர விடுதலை கோரிக்கை, இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே தொலைத்துவிட்ட இந்தச் சிறைவாசிகள், தற்போது முதுமையின் விளிம்பிலும், பல்வேறு கடுமையான உடல்நலக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றம் மூலமாக பரோல் நீட்டிப்பு பெற்று, தங்கள் குடும்பங்களுடன் இணைந்து சமூகத்தில் பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த மே மாதம் பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்கூட்டிய விடுதலைக்காக ஆவலுடன் காத்திருந்தவர்களை, அரசின் தொடர்ச்சியான தாமதங்கள் மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது சிறைவாசிகளையும் அவர்களது குடும்பங்களையும் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.

இச்சூழலில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு உட்பட பலர் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மூலமாக மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, கடந்த மே 29 ஆம் தேதி, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விரைவில் பரோலில் விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.  அதற்கான கோப்புகளில் அமைச்சர் கையெழுத்திட்டு விட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், இன்றுவரை பரோல் விடுதலை சாத்தியமாகவில்லை. இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன, அரசு நிர்வாகத்தில் எங்கு குளறுபடி நடக்கிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நீண்டகாலச் சிறைவாசிகளுக்குத் தொடர்ச்சியான நீண்டகால பரோல் விடுப்பு வழங்குவதற்கும், அவர்களின் நன்னடத்தை மற்றும் சிறைவாசக் காலத்தைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் நிரந்தர விடுதலை அளிப்பதற்கும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பது முன்னாள் சிறைவாசி பேரறிவாளன் வழக்கின் மூலம் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அதே சட்டக்கூறுகளையும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளின் நீண்டகால பரோல் மற்றும் நிரந்தர விடுதலைக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தமிழக அரசு எவ்விதப் பாரபட்சமுமின்றி துரிதப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version