வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 62 மையங்களைச் சுற்றிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் நோக்கில் சில சமூக விரோத சக்திகள், ஸ்ரீரங்கம் தொகுதி எண்: 139-ல் உள்ள தவெக கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தி தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் பரவலாக செய்தியாக வெளிவந்துள்ளது. இந்த கவலைக்குரிய சூழ்நிலையை உங்கள் அவசர கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

சமூக விரோத சக்திகள் அமைதியான முறையில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் உள்நோக்கத்துடனும், நமது கட்சியின் வாக்கு எண்ணும் மையப் பணியாளர்கள் மற்றும் சட்டமன்ற வேட்பாளர்கள் தங்களது தேர்தல் கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் நோக்கத்துடனும் இதுபோன்ற நாசவேலைகளைத் திட்டமிடுவதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

எனவே, 62 வாக்கு எண்ணும் மையங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும், அத்தகைய மையங்களில் நமது கட்சி வேட்பாளர்கள் மற்றும் தவெக கட்சிப் பணியாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் போதுமான ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யவும், மேலும் 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு வளையத்தை (தனிமைப்படுத்தப்பட்ட மண்டலம்) உருவாக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜனநாயக நலன் கருதி, இந்தப் பிரச்சினையை மிகவும் அவசரமானதாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version