குஜராத்தின் சானந்தில் அமைந்துள்ள CG Semi நிறுவனத்தின் அவுட்சோர்ஸ்டு செமிகண்டக்டர் அசெம்ப்ளி மற்றும் டெஸ்டிங் (OSAT) ஆலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தியா உலகளாவிய சிப் உற்பத்தி மையமாக உருவாகும் நோக்கில் வேகமாக முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆலையில் ஆண்டுதோறும் 20 கோடி (200 மில்லியன்) சிப்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், அந்த இலக்கை நிறுவனம் விரைவில் எட்டும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

மேலும், “படிப்படியாக, செங்கல் செங்கலாக, இப்போது சிப் சிப்பாக இந்தியா முன்னேறி வருகிறது. ஆண்டுக்கு 50 கோடி (500 மில்லியன்) சிப்கள் உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு. அந்த இலக்கையும் விரைவில் அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. CG Semi நிறுவனத்தின் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்தியா தற்போது உலகின் 2-வது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் நாடாக திகழ்கிறது என்றும், 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மின்னணு சாதனங்களின் உற்பத்தி சுமார் 7 மடங்கும், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 11 மடங்கும் அதிகரித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் செமிகண்டக்டர் வளர்ச்சி திடீரென ஏற்பட்டதல்ல என்றும், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மின்னணு புரட்சியின் அடுத்த கட்டமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார்.

“முதலில் தயாரிப்புகள், பின்னர் அதன் உதிரிப்பாகங்கள், தற்போது செமிகண்டக்டர்கள். அதாவது, மின்னணுத் துறையின் முழுமையான மதிப்புச் சங்கிலியும் இந்தியாவிலேயே உருவாகும். இது வளர்ந்த இந்தியாவுக்கான சாலை வரைபடமாகும். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் அடுத்த கட்டம் இதுவே” என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், “5 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றுவோம் என்று உறுதியெடுத்தோம். ‘டிசைன் இன் இந்தியா’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’ என்ற கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். நாட்டின் மூன்றாவது செமிகண்டக்டர் ஆலையில் சிப் பேக்கேஜிங் உற்பத்தியும் தற்போது வணிக ரீதியாக தொடங்கியுள்ளது” என்றார்.

2024-ஆம் ஆண்டு இந்த ஆலையின் அடிக்கல்லை நாட்டியதையும், 2025 ஆகஸ்டில் சிப் சோதனைப் பணிகள் தொடங்கியதையும் நினைவுகூர்ந்த பிரதமர், அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலிருந்து உற்பத்தி தொடங்கியுள்ள இந்த பயணம் பலரின் கடின உழைப்பின் பலன் என பாராட்டினார்.

இந்தியாவுடன் ஜப்பான் மற்றும் தாய்லாந்து தொழில் கூட்டாளர்களின் ஒத்துழைப்பில் உருவாகியுள்ள CG Semi ஆலை, ஒரு தொழில் முதலீடு மட்டுமல்ல; தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் சர்வதேச கூட்டாண்மைக்கு எடுத்துக்காட்டாகவும், இந்தியாவின் செமிகண்டக்டர் வளர்ச்சிக்கு புதிய வேகத்தை அளிக்கும் முக்கிய திட்டமாகவும் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version