தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள திரையரங்கில் கட்சியினருடன் நேரில் சென்று பார்த்தார். மேலும், தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நடித்த கடைசித் திரைப்படம் என்பதால் ஜனநாயகன் படத்திற்கு அனைத்து வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இத்திரைப்படம் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே திரைக்கு வர வேண்டியதாக இருந்தது. ஆனால், அரசியல் காரணங்கள் மற்றும் தணிக்கைத்துறையின் கடுமையான கட்டுப்பாடுகள், பல்வேறு தடைகள் காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போனது.
அனைத்துப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் இப்படம் மிக பிரம்மாண்டமாக தியேட்டர்களில் வெளியானது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள இரண்டு முக்கிய திரையரங்குகளில் ஜனநாயகன் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. காலை முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் திருவிழா போல கூடி ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனது கட்சி நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் கோபிசெட்டிபாளையம் உள்ள திரையரங்கிற்கு வருகை தந்தார்.
கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஜெயம் திரை அரங்கிற்கு ரசிகர்களின் பலத்த கோஷங்களுக்கு இடையே, ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். பின்னர் கிரேன் மூலம் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கிய செங்கோட்டையன் தியேட்டரில் அமர்ந்து பொதுமக்களுடனும், கட்சியினருடனும் இணைந்து திரைப்படத்தை ரசித்துப் பார்த்தார்.
படத்தை காண வந்த ரசிகர்கள் கூட்டமாக வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு திரையரங்கின் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்த வாயிற் கதவு சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
