காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், அங்கம்பாக்கம் அம்பேத்கார் காலனியில் உள்ள ஒரு சாதாரண வீட்டில், தனியாக வாழும் 29 வயது மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் பரிதாபத்திற்குரிய சம்பவத்திற்கு ஆளானார். கை கால்கள் செயல்படாத அந்த இளம்பெண், தினசரி வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட பிறரின் உதவியை நம்பியிருக்கும் நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற நபர், இரவு நேரத்தில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து, தன்னால் தற்காத்துக் கொள்ள முடியாத அந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட அச்சுறுத்தலில் பயந்து போன இளம்பெண், தன் முழு சக்தியையும் திரட்டி அலறல் எழுப்பினார். அந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார்கள் உடனடியாக ஓடிவந்து, வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
தப்பிச் செல்ல முயன்ற பாலகிருஷ்ணனை பிடித்து, மாகரல் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பாலகிருஷ்ணன் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், “பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர் கஞ்சா போதைக்கு அடிமையாகி, கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது இத்தகைய ஒழுக்கக்கேடான செயல்கள் பகுதியில் பலருக்குத் தெரியும். ஆனாலும், இப்படி ஒரு கொடூரமான செயலை மாற்றுத்திறனாளி பெண்ணிடம் செய்ய முயன்றது மன்னிக்க முடியாதது” என்று குற்றம் சாட்டினர்.
இந்தச் சம்பவம் அங்கம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உடல் ஊனமுற்ற பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த பொதுமக்கள், “இவர்கள் தனியாக இருக்கும் போது போதைப்பொருள் அடிமைகளும், குற்றப் பின்னணி கொண்டவர்களும் எளிதில் தாக்குதல் நடத்த முயல்கின்றனர். அரசு உடனடியாக மாற்றுத்திறனாளிகள், குறிப்பாகப் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். காவல் துறை அடிக்கடி பேட்ரோலிங் செய்ய வேண்டும். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
