தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் வேகமாக மாறி வரும் நிலையில், மதிமுகவின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தம்மை வெற்றி பெற வைத்ததற்காக அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி வந்தார். அப்போது விமான நிலையம் அருகே அரசு மற்றும் காவல்துறை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மதிமுக எம்.பி. துரை வைகோ நேரில் சென்று முதல்வர் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இது வழக்கமான அரசியல் நாகரிகமாகக் கருதப்பட்டாலும், பின்னர் அவர் தெரிவித்த கருத்துதான் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜய் சந்திப்பும் மதிமுகவின் ஆதங்கமும்
“நாங்கள் துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம்” என்று துரை வைகோ கூறியதாக வெளியான தகவல்கள், திமுக கூட்டணியில் மதிமுக உண்மையில் திருப்தியாக இருக்கிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. ஏற்கெனவே முதலமைச்சர் விஜய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, வைகோ விஜய்யின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வந்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போதே திமுக வட்டாரம் இதை கசப்புடன் பார்த்ததாக கூறப்பட்டது. மதிமுகவின் 2 எம்.எல்.ஏ-க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
அப்படி அல்லாமால் சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போன்று தாங்களும் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து, அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்திருக்கலாமே என்கிற ஆதங்கத்தையும் மதிமுகவில் ஒரு தரப்பில் வெளிப்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து வரும் மதிமுக, தனது தனித்துவ அரசியல் அடையாளத்தை இழந்து வருவதாகவும் அவர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், வரும் ஜூன் 27-ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுகவின் 32-வது பொதுக்குழு கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சியின் எதிர்கால அரசியல் பாதை, திமுக கூட்டணியில் தொடர்வதா அல்லது புதிய அரசியல் வாய்ப்புகளை ஆராய்வதா என்பது குறித்து அன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக மதிமுகவின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டங்களில், கட்சியின் சுயமரியாதை மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்து தீவிர விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு உருவாகியுள்ள புதிய அரசியல் சூழலை மதிமுக கவனமாகக் கண்காணித்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கசப்புடன் பார்க்கும் திமுக
இந்நிலையில், சமூக வலைதளங்களிலும் வைகோ மற்றும் துரை வைகோவை மையமாக வைத்து விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. திமுக ஆதரவாளர்கள் சிலர், வைகோவை கடுமையாக விமர்சித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக வரலாற்றில் வைகோவின் பங்கு, அவரது அரசியல் பிரிவு, தற்போதைய நிலைப்பாடு ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர்கள் முன்வைத்துள்ள கருத்துகள், கூட்டணிக்குள் நிலவும் மனக்கசப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
”தலைவர் கலைஞர் இருக்கும்போதே கழகத்தை கருவறுக்கப் பார்த்த வை.கோபால்சாமி தள்ளாத வயதில் தன் மகன் மூலம் மீண்டும் தன் துரோக புத்தியை காட்டியிருக்கிறார்.தனது இறுதிக்காலத்தில் தலைவர் ஸ்டாலினுடனான பயணத்தின் விளைவாக வைகோ மீது வரலாறு சற்று கருணை காட்டிவிடக்கூடுமோ என்று சில சமயங்களில் நான் கூட கவலைப்பட்டதுண்டு. அதற்கெல்லாம் இடந்தராமல் வைகோ ஒரு அக்மார்க் துரோகியாகவே மீண்டுமொருமுறை வெளிப்படுவது மகிழ்ச்சி. இதுவே அவரது நிரந்தர அடையாளம்” என திமுக ஆதரவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.
எதிர்கால திசையை தீர்மானிக்கும் பொதுக்குழு கூட்டம்
மறுபுறம், மதிமுக தரப்பினர் இதை அரசியல் மரியாதை மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடாகவே பார்க்கின்றனர். ஒரு கூட்டணியில் இருப்பது என்பது விமர்சனங்களையோ அல்லது மாற்றுக் கருத்துகளையோ முழுமையாக கைவிடுவதல்ல என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் அரசியல் கணக்குகள் வேறு மாதிரி பேசுகின்றன. வரவிருக்கும் தேர்தலில் தனித்த அடையாளத்துடன் களமிறங்க வேண்டுமா அல்லது புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருக்கம் காட்ட வேண்டுமா அல்லது திமுக கூட்டணியிலேயே இருந்து அதிக அரசியல் இடத்தைப் பெற வேண்டுமா என்ற மூன்று வழிச்சந்திப்பில் மதிமுக தற்போது நிற்கிறது.
வைகோவின் நீண்டகால அரசியல் அனுபவமும், துரை வைகோவின் புதிய தலைமுறை அணுகுமுறையும் கட்சியின் அடுத்த முடிவில் முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மதிமுகவின் எதிர்கால அரசியல் திசையை மட்டுமல்ல,எதிர்கால தேர்தலுக்கான கூட்டணி பாதையையும் மாற்றக்கூடியவை.
இதனால், ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டம் ஒரு சாதாரண கட்சி நிகழ்வாக இல்லாமல், அக்கட்சியின் அடுத்த அத்தியாயத்தை தீர்மானிக்கும் முக்கிய மேடையாக மாறியுள்ளது. திருச்சியில் விஜய்க்கு அணிவிக்கப்பட்ட அந்த ஒரு சால்வை, வெறும் மரியாதையின் அடையாளமா அல்லது புதிய அரசியல் சமிக்ஞையா என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியவரலாம்.
