பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளரும், கடுமையான விவாதவீரருமான ஷேசாத் பூனவாலா கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் 2017-ல் கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் சர்ச்சையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது. அதன்பின் பா.ஜ.க.வில் இணைந்த ஷேசாத், விரைவில் கட்சியின் முக்கிய முகமாக உருவெடுத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக அவர் அடையாளம் காணப்பட்டார். சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வந்த அவர், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பா.ஜ.க. சார்பில் உடனடி பதிலளிக்கும் முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
எனினும், சமீப நாட்களில் அவரது நடவடிக்கைகள் வேறு திசையில் செல்வதாகக் கருதப்பட்டது. தனது எக்ஸ் (ட்விட்டர்) பயோவில் ‘பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர்’ என்பதை நீக்கியது அவரது விலகலை உறுதிப்படுத்தியது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், அவர் வெளியிட்ட சில வீடியோக்கள் அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணத்தை பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு வீடியோவில் ஷேசாத், “நரேந்திர மோடி ஜி போன்ற சொந்த முயற்சியால் உயர்ந்த ஒருவரை பாஜக மட்டுமே தர முடியும். மற்றவர்கள் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆதிக்கத்தையே முன்னிறுத்துகின்றனர். எனவே இளைஞர்களுக்கு பாஜக சிறந்த தேர்வு” என்று புகழ்ந்திருந்தார். இத்தகவல்கள் அவரது பாஜக மீதான நம்பிக்கையை காட்டினாலும், தற்போதைய விலகல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கட்சிக்குள் இருந்த அதிருப்தி, கருத்து வேறுபாடுகள் மற்றும் மரியாதைக் குறைவு போன்றவை விலகலுக்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களும் இதற்கு அடிப்படையாகக் கூறப்படுகின்றன. ஷேசாத் பூனவாலாவின் இந்த முடிவு, பாஜகவின் உள் இயக்கங்கள் குறித்த விவாதங்களை மீண்டும் தூண்டியுள்ளது. அவரது அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன.
