பாரத் பெட்ரோலிய நிறுவனம் கேரளா மாநிலம் கொச்சி முதல் கர்நாடகா மாநிலம் தேவனஹந்தி வரை குழாய் மூலம் எரிபொருள் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை மாவட்டம் இருகூர் வரையிலும், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் இருந்து கர்நாடகா வரை சாலையோரம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 70 கிலோ மீட்டர் வரை விவசாய விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 60 கிலோ மீட்டர் வருகின்றது. கோவை மாவட்டம் இருகூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் வழியாக முத்தூர் வரை எண்ணெய் குழாய் பதிப்பதற்கான திட்டத்திற்கு கோவை மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
தங்களது விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும், நிலத்தின் மதிப்பு வெகுவாக சரியும் எனவும், எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களில் பதித்தால் விளைச்சல் பாதிப்பு ஏற்படும் எனவும், அவசர கதியில் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் நிறைவேற்றி வருவதால் எப்போது வேண்டுமானாலும் குழாய் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எனவே திட்டத்தை சாலையோரமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு வருகின்றனர்.
இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் IDPl பைப் லைன் திட்டம் தற்பொழுது திருப்பூர் மாவட்டம் பல்லவராயன் பாளையம் அருகில் துவங்கி நடபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 29 ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அரசு செயலாளர், திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர், துறைசார்ந்த அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து பைப் லைன் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் மாலை வரை நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பட்டி சுங்கச்சாவடி அருகே நடைபெற்று வரும் IDPL குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், விவசாயிகளின் கருத்துகளை முறையாக கேட்காமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டி, ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்ட்த்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வேலம்பட்டி சுங்கச்சாவடி பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
