ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளை பெற்றெடுத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு பெரிய கட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள், ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வு உத்தவ் அணியை மேலும் பலவீனப்படுத்தியுள்ள நிலையில், ஷிண்டே அணியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த இணைப்பால், ஷிண்டே சிவசேனாவின் மக்களவை பலம் 7ல் இருந்து 13 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம், உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இந்த மாற்றம் மகாராஷ்டிரா அரசியலில் ஏற்கெனவே நிலவும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 2022-ல் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து கட்சியைப் பிளந்ததில் இருந்து, சிவசேனாவின் இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. தற்போதைய நடவடிக்கை அந்தப் பிளவை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
இந்த இணைப்புகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள உத்தவ் அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக விமர்சித்தார். “கென்யாவைச் சேர்ந்த ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்று உலக சாதனை படைத்ததாகக் கேள்விப்பட்டோம். ஆனால், இங்கே ஏக்நாத் ஷிண்டே கர்ப்பமாக இருந்து, ஒரே பிரசவத்தில் 6 துரோகிகளைப் பெற்றெடுத்துள்ளார். இதற்கான தொட்டில் அவரது அதிகாரப்பூர்வ இல்லமான நந்தபவனில் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலைமையை சரிசெய்ய இனி சிசேரியன் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும்,” என அவர் கூறினார்.
முன்னதாக, கட்சி மாறும் திட்டத்தில் இருந்த எம்பிக்களை சஞ்சய் ராவத் அவமரியாதையாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த எம்பி நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர், “ராவத்தின் அவமரியாதையான பேச்சுக்குப் பிறகே நாங்கள் வெளியேறும் முடிவை இறுதி செய்தோம்,” என்று தெரிவித்தார். இந்த சம்பவம் கட்சியின் உள்மோதல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
சிவசேனா கட்சியின் இந்தப் பிளவு மகாராஷ்டிராவில் பாஜக-ஷிண்டே கூட்டணிக்கு பெரும் லாபத்தைத் தரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். உத்தவ் அணி தற்போது தனது எஞ்சிய எம்பிக்களை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த வளர்ச்சி அடுத்த கட்ட அரசியல் சமன்பாடுகளை எப்படி பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
