சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண் “1091” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி காவல் உதவியை வழங்கவும், பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடிய இடங்களில் கண்காணிப்பு பணியை வலுப்படுத்தவும் சிங்கப் பெண் சிறப்பு காவல் படையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சிங்கப் பெண் சிறப்புப் அதிரடிப்படையின் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், அவசர அழைப்புகளுக்கு விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளவும், 1091 என்ற உதவி எண் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான பிரத்யேக உதவி எண்ணாக அறிவிக்கப்பட்டு, 112 அவசர கால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவசர காலங்களில் தகவல் பரிமாற்றம் வேகமாக நடைபெறுவதுடன், சம்பவ இடத்திற்கு உடனடி காவல் உதவி வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
1091 உதவி எண்ணிற்கு வரும் ஒவ்வொரு அவசர அழைப்பிற்கும் உடனடி கவனம் செலுத்தும் வகையில், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக கூடுதல் பிரத்யேக அழைப்பு ஏற்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையம் 24 மணி நேரமும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்பட்டு, பயிற்சி பெற்ற காவலர்களால் கண்காணிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாட்டறை புகார்களைப் பெற்று, உடனடி நடவடிக்கையை ஒருங்கிணைக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் தொந்தரவு, வன்முறை, குடும்ப வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், பின்தொடர்தல், மிரட்டல் அல்லது உடனடி காவல் உதவி தேவைப்படும் எந்தவொரு சூழ்நிலையிலும் தயக்கமின்றி 1091 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

