பொருளாதாரம், தொழில், சேவை மற்றும் உற்பத்தி எனப் பல துறைகளிலும் அசுர வளர்ச்சி கண்டு வரும் தமிழ்நாடு, தற்போது மற்றொரு புதிய உச்சத்தையும் தொட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவு தங்கக் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. குறிப்பாக, டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தைக் கடந்தது. இந்த அதிரடி விலை உயர்வால் மக்கள் புதிய நகைகள் வாங்குவது குறைந்தாலும், தங்கக் கடன் சந்தைக்கு இது மிகப்பெரிய ஊக்கமளித்துள்ளது.
தங்கத்தின் மதிப்பு உயர்ந்துள்ளதால், பழைய நகைகளை அடகு வைக்கும்போது முன்பு கிடைத்ததை விட தற்போது அதிக தொகை கடனாகக் கிடைக்கிறது. இதனால் மக்கள் தங்களது பணத் தேவைகளுக்கு மற்ற கடன்களை விட தங்கக் கடன்களையே அதிகம் நாடுகின்றனர். தேசிய அளவில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த தங்கக் கடன்களில் 75 சதவீதம் தென்னிந்திய மாநிலங்களில்தான் உள்ளன என்பது ஆச்சரியமூட்டும் தகவலாகும்.
மார்ச் 2026 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 18.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கடன்கள் நிலுவையில் உள்ளன. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களின் பங்கு மட்டும் 13.94 லட்சம் கோடி ரூபாயாகும்.
அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் அதிகமான தங்க கடன் வாங்கி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கக்கூடிய தங்க நகை கடனின் மதிப்பு 5.96 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அடுத்ததாக ஆந்திராவில் 3.08 லட்சம் கோடி ரூபாயும், கர்நாடகாவில் 1.81 லட்சம் கோடியும், தெலுங்கானாவில் 1.6 லட்சம் கோடி ரூபாயும் கேரளாவில் 1.45 லட்சம் கோடி ரூபாயும் நிலுவையில் உள்ள தங்க கடன்களின் மதிப்பாக உள்ளது.
பொதுமக்களுக்கு தங்கக் கடன் லாபகரமாக அமைவது போலவே, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் இது மிகவும் பாதுகாப்பான ஒரு கடனாக அமைகிறது. வாடிக்கையாளர் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டாலும், தங்கத்தின் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்துவிடலாம் என்பதால், மற்ற கடன்களை விட தங்கக் கடன்களுக்கே வங்கிகள் அதிக முன்னுரிமை அளிக்கின்றன.
அந்த வகையில் இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பிரிவாக தங்க நகை கடன் பிரிவு இருக்கிறது. ஓராண்டிலேயே இது 50% உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக தனி நபர் கடன்கள் 12.9% வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன வீட்டு கடன்களை பொறுத்தவரை 9.4 சதவீதம் என ஒரு நிலையான வளர்ச்சியை காட்டி இருக்கிறது.
