தென்னிந்தியாவின் “இசையரசி” என்று அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி, 70 ஆண்டுகளாக தனது வசீகர குரலால் 48,000க்கும் அதிகமான பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல 17 இந்திய மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களைப் எஸ்.ஜானகி பாடி உள்ளார். மேலும், ஆங்கிலம், ஜப்பான், அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார்.
1957-ம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பெண் என் ஆசை பாழானது ஏனோ’ என்ற பாடல் மூலம் தனது இசைப் பயணத்தை தொடங்கினார் எஸ்.ஜானகி. இவரின் இசை வாழ்க்கை 6 தலைமுறைகளை கண்டுள்ளது.
இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி என்ற கூட்டணி ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த பாடல்களை தந்துள்ளது. பி.பி.ஸ்ரீனிவாஸ், கே.ஜே.யேசுதாஸ், ஜெயச்சந்திரன் ஆகியோருடனும் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் எஸ்.ஜானகி பாடி உள்ளார்.
1992-ல் இலங்கை சென்றிருந்தபோது எஸ்.ஜானகிக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். ‘மௌனப் போராட்டம்’ என்ற தெலுங்குப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர் எஸ்.ஜானகி.
2016 அக்டோபர் மாதம் திரைப்படங்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க 2018ம் ஆண்டில் ‘பண்ணாடி’ என்ற தமிழ் படத்திற்காக மீண்டும் பாடினார்.
