2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளை, தொகுதிவாரியாக சந்தித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
உடன்பிறப்பே வா என்ற பெயரில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி சில வாரங்களுக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தொகுதிக்குள் இருக்கும் பிரச்னைகள், கட்சி நிர்வாகிகளுக்குள் இருக்கும் மனக்கசப்புகள், எதிர்கட்சிகளின் வியூகங்கள், கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலைமை போன்றவை குறித்து நேருக்கு நேராக கேட்டு அறிகிறார்.
ஒருவேளை சம்பந்தப்பட்ட தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யும்பட்சத்தில் சுணங்கி விடாமல் வெற்றிக்கனியை பறிக்க முழு முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
எதிர்வரும் தேர்தலில் 200 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் வியூகங்களை வகுத்து செயலாற்றி வருகிறார்.
