‘திமுக கூட்டணியில் சலசலப்புகள் நிலவுகிறது’ என்ற செய்திகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பது தொகுதி பங்கீட்டில் நிலவும் வாய்க்கால் பிரச்சனைகள் தான். அப்படிப்பட்ட தொகுதி பங்கீடு விவகாரத்தில் தற்போது திமுக ஒரு முடிவு செய்திருப்பதாகவும், விசிகவை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கும் ஒரு முக்கிய நகர்வை திமுக மேற்கொள்ள உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் தேர்தல் பணிகளோடு சேர்த்து கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உள்ள வெற்றி வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கசிந்த தகவலின் படி, “கூட்டணி கட்சிகள் கடந்த முறை எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றனரோ, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இம்முறை சீட் ஒதுக்குவோம்” என சில முக்கிய நிர்வாகிகள் கறாராக சொல்லியிருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தின் முடிவில், “திமுகவுக்கு 170 சீட்டுகள்; தோழமைகளுக்கு 64” என பங்கு பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ‘வெல்வோம் 200 – படைப்போம் வரலாறு’ என்ற வெற்றி முழக்கத்தோடு களமிறங்கும் திமுக, கூட்டணியில் அதிக தொகுதிகளில் நின்று பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என திடகாத்திரமான முடிவோடு இருக்கிறது. தனிப்பெரும்பான்மையோடு ‘தனித்தே ஆட்சி’ அமைக்க வேண்டும் என்றே முதல்வர் இக்கணக்கை போட்டுள்ளார் என கூறும் அறிவாலய உடன்பிறப்புகள், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்கனவே அவர்கள் வென்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்கலாம் என்பதால் அதில் எஞ்சிய இடங்களை திமுகவுக்கு சேர்த்துவிடலாம் எனவும் தலைமை திட்டமிடுவதாக கிசுகிசுக்கிறார்கள். இந்த கணக்கின்படி, திமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்பட்சத்தில் அதை வைத்து, சில தோழமைகள் போடும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற ஆட்டங்களுக்கும் முடிவுகட்ட திட்டமிடுகிறதாம் தலைமை.
இது காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, தவாக உள்பட அனைத்து தோழமைகளுக்கு அதிர்ச்சு தரும் என்றாலும், அதில் காங்கிரசுக்கு கூடுதல் அதிர்ச்சியை தரும். காரணம், இம்முறை தங்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றே ஆக வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் இருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் பக்கமிருந்து பார்த்தால் அது தவறும் அல்ல. ‘பாஜகவுக்கு எதிராக வளர வேண்டும்’ என்ற கட்டாயத்திலுள்ள காங்கிரஸ், தான் இருக்கும் பிராந்தியங்களிலெல்லாம் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அப்புள்ளியில் இருந்து பார்த்தால் திமுகவுக்கான நெருக்கடிகள் சரிதான். ஆனால், திமுக தலைமை காங்கிரசின் அந்த தவிப்பிற்கு தலையசைப்பார்களா என்பது கேள்விக்குறி தான்.
சரி, இதில் அடுத்த விவகாரம் என்னவென்றால், ராமதாஸ் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது. இந்த திட்டம், ‘ரொம்ப அழுத்தம் கொடுத்தால் காங்கிரசை கழட்டி விட்டு விடலாம்’ என்பதன் தொடர்ச்சியாக நடக்கலாம் என கூறப்படும் நிலையில், அதனை ஒருபக்கம் வைத்துவிடலாம். ஏனெனில் மறுபக்கமோ, எப்படி இருந்தாலும், கூட்டணியை பலப்படுத்தும் நோக்கோடு, ராமதாஸ் பாமகவை உள்ளே இணைக்க திமுக தலைமை முடிவெடுத்துள்ளது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு எழும் சிக்கல், திருமாவின் எதிர்ப்பு. காரணம், விசிகவின் அதிமுக்கிய கொள்கை முடிவு, “மதவாத, சாதியவாத சக்திகள் இருக்கும் கூட்டணியில் விசிக இடம்பெறாது” என்பது. இதில் மதவாதம் என பாஜகவை குறிப்பிடும் திருமா, சாதியவாதம் என சொல்வது ‘பாமக’வை தான். அப்படி இருக்கையில், ராமதாஸ் பாமக உள்ளே வரும்பட்சத்தில் அக்கூட்டணியில் திருமா தொடர்வது பெரும் சவால் தான். அத்தகைய நிலையில் திருமாவை திமுக எப்படி சமாளித்து தலையசைக்க வைக்கும் என்பது தான் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பும் கேள்வி.
இங்கு திருமாவுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், கொள்கையில் சமரசம் செய்துகொண்டு ராமதாசோடு கைகோர்த்து ஒரே மேடையில் நிற்கும்பட்சத்தில், மேடையின் கீழிருக்கும் விசிக தொண்டர்கள் கணிசமாக கழன்று விடும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே, கூட்டணிக்குள் தங்களுக்கு எதிராக நடக்கும் பல விடயங்களில் திருமா சமரசம் செய்துகொண்டு, மனக்கசப்புகளோடே வேறு வழியின்றி திமுகவோடு பயணிக்கும் சூழலே விசிகவினரை ஒருவித அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. அப்படி இருக்கையில், தொகுதிப்பங்கீட்டில் சமரசம், உச்சபட்சமாக கொள்கை முடிவில் சமரசம் போன்றவற்றை திருமா மேற்கொண்டால் அது விசிகவினரை மேலும் சுணக்கமடைய செய்யலாம். ராமதாசும் பாமகவும் முன்னொரு காலத்தில் ஒன்றாக பயணித்தவர்கள் தான் என்றாலும் கூட, அதற்கு பின்பான நிகழ்வுகள் அவர்களை எதிரெதிர் துருவங்களாக நிறுத்திவிட்டு பின்பு, மீண்டும் இணைவு சாத்தியமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான். இங்கு திருமா போதாதென்று, தவாக வேல்முருகன் வேறு. ஆக, அவரையும் சமாளித்தாக வேண்டும்.
இப்படியாக, திமுக தற்போது எடுத்திருப்பதாக கூறப்படும் மேற்கூறிய தொகுதிப்பங்கீட்டு கணக்கு மற்றும் பாமக – விசிக இணைப்பு இரண்டுமே சவாலான விடயம் தான். இப்பாதையில் திமுக தொடர்ந்து முயற்சிக்குமேயானால் அதன் விளைவுகள், முடிவுகள் என்னவாக இருக்கும்? என்ற கேள்வியின் முடிவில் தொக்கி நிற்கும் ஒற்றை வரி, “அரசியலில் எதுவும் நடக்கலாம்..!”
