TAPS பென்ஷன் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கங்கள், வரும் 6ம் தேதி நடக்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம், அரசு துறைகளில் காலியாகவுள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை களைவது என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் – ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வந்தனர்
ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழுக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு அண்மையில் அறிவித்தது.
இந்தநிலையில், இதுதொடர்பாக, அமைச்சர்கள் குழு, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. அப்போது, ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ஓய்வூதிய திட்டமான, அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme) செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அரசு ஊழியர்கள் சங்கங்கள், வரும் 6ம் தேதி நடக்க இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. மேலும், தங்களது இதர கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்றுவார் என நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிப்புகளை ஊட்டி இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர்.
