புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசுக்கு முதல் 6 மாதங்கள் எவ்வித இடையூறும் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால், அதற்கு நேர்மாறாக இன்று ஒவ்வொரு விஷயத்திலும் திமுகவினர் குற்றம் கண்டுபிடித்து வருகிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வென்று தவெக ஆட்சியமைக்க விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன. இந்த நிலையில், தவெக அரசு அமைந்து இரண்டு வாரங்களேயான சூழலில், திமுகவினர் வைக்கும் தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று (மே 25) நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது, “மக்களுக்கு நல்லது செய்தால் தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்பதை இனி யாரும் நம்பாதீர்கள். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதிக்குச் செய்த நன்மைகளைப் போல வேறு எந்தவொரு எம்.எல்.ஏ-வும் தமிழ்நாட்டில் செய்திருக்க முடியாது. சென்னைக்குச் சுற்றுலா செல்வது போல மக்கள் கொளத்தூருக்குச் சென்று அங்கு செய்யப்பட்டுள்ள பணிகளைப் பார்க்கலாம். ஆனால், மக்கள் நினைத்தால் எவ்வளவு செய்தாலும் தூக்கி வீசிவிடுவார்கள் என்பதற்கு கொளத்தூர் தேர்தல் முடிவே உதாரணம். அவர் தோற்றது மிக வருத்தமான விஷயம்.

ஏற்கனவே ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டமன்றத்தில் இருப்பதுதான், ஆளுபவர்களை நெறிப்படுத்தவும் மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்யவும் உதவிகரமாக இருக்கும். அவர் தோற்றது வருத்தமளிப்பதால், அவருக்கு ஆறுதல் கூறவே கடந்த மே 5-ஆம் தேதி நானும், திருமாவளவனும், வீரபாண்டியனும் அறிவாலயத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது, ‘சிறப்பான ஆளுங்கட்சியாக இருந்தோம், இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று முந்தைய நாள் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையைப் பாராட்டிப் பேசினோம்.

அதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், ‘அதுவே எங்களின் முடிவு, அதில் உறுதியாக உள்ளோம். ஒரு 6 மாத காலம் போகட்டும், எப்படி ஆட்சி நடத்துகிறார்கள் என்று பார்ப்போம். அதற்குப் பிறகு அவருடைய ஆட்சியில் இருக்கும் குறைகளையும் குற்றங்களையும் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிப் பின்னர் தீர்மானிப்போம்’ என்று எங்களிடம் தெளிவாகக் கூறினார்.

ஆனால், அன்று மு.க.ஸ்டாலின் பேசியதற்கும், இப்போது திமுக வெளிப்படுத்தும் கருத்துகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தவெக அரசு அமைந்து இரண்டு வாரங்களே ஆகும் நிலையில், ஒவ்வொன்றிலும் குற்றம் கண்டுபிடிக்கக் கூடிய காரியத்தில் திமுக தலைவர்களும், தொண்டர்களும், அவர்களின் சமூக வலைத்தள ஆதரவாளர்களும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கடந்த முறை மு.க.ஸ்டாலின் முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது, கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒரே ஆண்டில் அல்லது ஒரே நாளில் நிறைவேற்றிவிடவில்லை. அவரது ஆட்சியின் 5-ஆவது ஆண்டில்தான் மிக அதிகமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. அதை என்னால் பட்டியலிட்டுக் கூற முடியும்.

எனவே, எந்தவொரு புதிய ஆளுங்கட்சியாக இருந்தாலும் அதற்கு உரிய அவகாசம் தரப்பட வேண்டும். அந்தப் பொறுமை மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தேவை. முதலமைச்சர் விஜய்க்கு அரசு நிர்வாகத்தை நடத்த உரிய கால அவகாசத்தை வழங்க வேண்டும்” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் அழுத்தமாகப் பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version