மால்டோவா, வடக்கு மாசிடோனியா மற்றும் ருமேனியா ஆகிய 3 கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கான 6 நாள் அரசுமுறைப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டார்.

மால்டோவா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மால்டோவா அதிபர் மாயா சாண்டு மற்றும் வடக்கு மாசிடோனியா அதிபர் கோர்டானா சில்ஜனோவ்ஸ்கா-டாவ்கோவா ஆகியோரை நேரில் சந்தித்த திரௌபதி முர்மு, இருதரப்பு உறவுகள், வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் ருமேனியாவிற்கு பயணம் செய்தார். அங்கு அந்நாட்டு அதிபர் நிகுசோர் டான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்து அவர் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றார்.

இந்தப் பயணத்தின் போது, மூன்று நாடுகளிலும் நடைபெற்ற வர்த்தக மன்றக் கூட்டங்களில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள இந்திய சமூகத்தினரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் தூதரக மற்றும் வர்த்தக உறவுகளைப் புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அமைந்த இந்த 6 நாள் பயணத்தை நிறைவு செய்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லிக்குப் புறப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version