ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடுமையான காட்டுத்தீ பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2.70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், அவிலா, குவாதலஹாரா உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதேபோல பிரான்சின் கேப் பிரெட், பிஸ்காரொஸ், கிரோண்டி, லெண்டிஸ் மற்றும் பிரொடொக்ஸ் ஆகிய நகரங்களிலும் காட்டுத்தீயின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. இந்த பேரழிவு காட்டுத்தீயில் சிக்கி ஸ்பெயினில் 13 பேரும், பிரான்சில் 2 பேரும் என மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சுமார் 2,70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான முகாம்களிலும் அண்டை நகரங்களிலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அரசுகள் ராணுவத்தைக் களமிறக்கியுள்ளன. நிலப்பரப்பில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், வான்வழியாக ஹெலிகாப்டர்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் தண்ணீரையும் தீயணைப்பு வேதிப்பொருட்களையும் தெளித்துத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
