லட்சக்கணக்கான மாணவர்களின் போராட்டத்தால் வெற்றி கிடைத்துள்ளதால், என்னை யாரும் ஹீரோவாக சித்தரிக்க வேண்டாம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘போராட்டத்தை வெற்றி பெற வைத்து நாட்டின் புதிய ஹீரோவாக அவதரித்துள்ளது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அபிஜீத் தீப்கே, தயவுசெய்து என்னை தனிப்பட்ட முறையில் ஹீரோவாக ஆக்க முயற்சிக்காதீர்கள். இந்த நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றிலும் ஒரு தனிநபரை ‘ஹீரோ’வாக உயர்த்திப் பிடித்ததன் விளைவைத்தான் இன்று வரை இந்த நாடே அனுபவித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

“இந்த வெற்றி என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல. கடந்த சில நாட்களாக வீதியில் இறங்கி போராடிய லட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அடைந்த வெற்றி என்று அவர் குறிப்பிட்டார்.

“கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது எங்களது போராட்டத்தின் முதற்கட்ட நகர்வு மட்டுமே. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இழப்பீடு, வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எங்களின் மற்ற பிரதான கோரிக்கைகள் நிறைவேறும் வரை அறப்போராட்டம் ஓயாது” என்றும் அபிஜித் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version