மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
எதிர்காலத்தில் வரவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை, மாநிலப் பிரதிநிதித்துவம் மற்றும் மாநில உரிமைகளில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் (சாதக, பாதக அம்சங்கள்) குறித்து எம்பிக்களின் கருத்துகளை முதலமைச்சர் இக்கூட்டத்தில் கேட்டறிய உள்ளார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திமுக, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதில் தங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை எனத் தெரிவித்திருந்தது. அதேசமயம், இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக மாநில அளவிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

