நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

NDA நாடாளுமன்றக் கட்சியின் ‘மங்கள் மிலன்’ கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, மாணவர்களின் எதிர்காலத்தை எந்தக் தவறுக்காகவும் பாதிக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். நீட் தேர்வு முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது, நீட் விவகாரத்தில் முறைகேடு புகார்கள் வெளியானவுடன் அரசு தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை எடுத்தது. வினாத்தாள் கசிவு வெளிவந்தவுடனேயே 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நீட் மறுதேர்வு நடத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவுகளும் விரைவாக வெளியிடப்பட்டன.

வருங்காலத்தில் இது போன்ற தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற தீவிரக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நாட்டின் தலைசிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும், வெளிநாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) மேற்கொள்ளும்போது விவசாயிகளின் நலன்களுக்கு எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், நாட்டின் பொருளாதார நலன் மற்றும் விவசாயிகளின் நலன் ஆகிய இரண்டும் பாதுகாப்படுவதே வர்த்தக ஒப்பந்தங்களின் வெற்றியாகும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version