மேற்கு வங்க மாநிலம் பாருயிபூரில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு செல்ல முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் (TMC) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென், “இது வெறும் அவசரநிலை அல்ல; ‘சூப்பர் எமர்ஜென்சி‘. தற்போது நடைபெறுவது முற்றிலும் தவறானதுஎன்று தெரிவித்தார்.

மற்றொரு எம்.பி. பிரதிமா மொண்டல், “முன்னாள் முதலமைச்சரையே சம்பவ இடத்துக்கு செல்ல அனுமதிக்காதது ஜனநாயகத்தின் படுகொலை. இதை வன்மையாக கண்டிக்கிறோம். மம்தா பானர்ஜியைப் பார்த்து பாஜகவும் தற்போதைய அரசும் அஞ்சுகின்றன. அவர் அங்கு சென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதால் அவரை தடுத்துள்ளனர்என்று குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில், பிமான் பானர்ஜி, டோலா சென் மற்றும் பிரதிமா மொண்டல் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு, மம்தா பானர்ஜியின் இல்லத்திலிருந்து பாருயிபூருக்கு புறப்பட்டுச் சென்றது.

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த பாஜக, அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளது. அரசியல் செல்வாக்கு சட்டத்தை விட மேலோங்கி நிற்பதாக மக்கள் நினைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாருயிபூர் சம்பவம் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளதுஎன்று குற்றம்சாட்டினார்.

மேலும், “சம்பவம் நடந்தபோது பாஜக தரப்பில் எந்த எதிர்ப்பும் இல்லை. பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை. நீதி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உருவானால், பாதிக்கப்படுவது சமூகமேஎன்றும் அவர் விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version