சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சி மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால அமைப்பு பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல வெற்றிகளையும் தோல்விகளையும் கடந்த இயக்கம். தேர்தல் தோல்வியால் தொண்டர்கள் மனம் தளர வேண்டிய அவசியமில்லை” என்றார்.
தேர்தல் முடிவுகளைப் பற்றி பேசிய அவர், “வெற்றிக்கான காரணம் என்ன என்பதை ஆராயத் தேவையில்லை. கவர்ச்சிகரமான ஒரு மாயையை நம்பி மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அந்த மாயை குறித்து மக்கள் தற்போது ஒரு மாதத்திலேயே உணரத் தொடங்கியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
மேலும், சமீப காலமாக அதிமுகவில் இருந்து பிற கட்சிகளுக்கு சென்றவர்களை மறைமுகமாக விமர்சித்த அவர், “கட்சியை விட்டு சென்றவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல. பதவி சுகத்திற்காகவும், தங்களது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அவர்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.
“அதிமுகவை நிர்மூலமாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. பீனிக்ஸ் பறவை போல அதிமுக மீண்டும் எழுந்து ஆட்சிக் கட்டிலில் அமரும்” என தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
இளைஞர் அணி, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட அமைப்புகளுக்கு மீண்டும் புத்துணர்வு அளித்து தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும், கட்சியின் அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தி மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய இலக்கு எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
