விஜய் அரசை கவிழ்க்க திமுக சதி செய்வதாஅகவும், ஆனால் விஜய் அரசுக்கு காவல் அரணாக போர்க்கவசமாக இருந்து பாதுகாப்பளிப்போம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த புத்தரச்சல் பகுதியில் சீமை கருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு மதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மேடையில் பேசியபோது  சீமை கருவேல மரத்தின் தீமைகள் குறித்தும் அவை அகற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி பேசினார்.

மேலும் அவர் பேசும்போது காற்று தீவிரமாக அடித்ததால் அருகில் இருந்த நபரை பார்த்து தன்னை பிடித்துக் கொள்ளுமாறு  வைகோ கேட்டுக் கொண்டார். நான் கீழே விழுந்து விட்டால் அது தான் பிரதான செய்தி ஆகிவிடும். வேண்டாத வேலையாக சீமை கருவேல மரம் அகற்ற சென்று வைகோ விழுந்து விட்டார் என்பார்கள். நான் நன்றாக கால் ஊன்றி நிற்கிறேன் எனக் கூறினார்.

மேலும் கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் பேசியதை போடவில்லை எனவும் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு எதிரான சரத்தை நீக்க வைத்தவன் நான். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதும் போராட்டத்தில் ஈடுபட்டவன் நான். பத்திரிகைகளை மிகவும் மதிப்பவன் நான். அவர்கள் தான் ஜனநாயகத்தின் தூண்கள், விழிகள் எனப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை துவக்கி வைத்தார் . பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், 

5 மாவட்டங்களில் இதுவரை சீமைக்கருவேல மரங்களை அகற்றி உள்ளதாகவும், பொது நல அமைப்புகள் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் 28 மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்றவர், மேகதாது அணை கட்டும் விவகாரத்தை ஊக்குவிப்பது மத்திய அரசு. தமிழகம் இதனை கண்டு கொந்தளித்து எழும் என்றார்.  இதற்காக அன்புமணி பிரச்சார நடைபயணத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். கர்நாடகா, அவர்கள் மாநிலத்தில் உள்ள ஆற்றுக்கு அணைக்கட்டுகிறோம் என்கிறார்கள். அப்படி என்றால் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நமக்கு ஆகிவிடுமா? ஆவடி தொழிற்சாலையை சொந்தம் கொண்டாட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசியலுக்கு வந்தவர், அர்லேகர் என்பவரை ஆளுநராக நியமித்து ஜனநாயக சித்து விளையாட்டை பாஜக நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

குதிரை பேரம் என வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது.  எங்கள் கட்சியினரை திமுக சின்னத்தில் நிற்கவைத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டது தான் குதிரை பேரம். கட்டிங் , கரப்பஷனுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தவெக அரசு. ஊழலை வேருடன் பிடுங்கி எரியும் அரசாக உள்ளதால் நாங்கள் தவெகவை ஆதரிப்போம். நாங்கள் காவல் அரணாக போர்க்கவசமாக இருந்து விஜய் அரசுக்கு பாதுகாப்பு அளிப்போம் என சூளுரை என தெரிவித்தார். 

கவர்னர் ஆட்சியை கொண்டு வந்தால் பாஜக ஆட்சியை கொண்டு வரலாம் என பகல் கனவு கண்டார்கள் அதனை முறியடித்துள்ளோம். தவெக ஆட்சியை அகற்ற தலைகீழாக நின்று பார்க்கிறார்கள் என்று கூறினார்.

முதல்வர் ஆழ்ந்து யோசித்து ஒவ்வொன்றையும் கிரகித்து செயல்பட்டு வருகிறார். அடுத்த 6 மாதத்தில் அவர் நிபுணத்துவம் வாய்ந்தவராக திகழ்வார் என நம்பிக்கை தெரிவித்தவர், இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றார்.

இடையிடையே கூட்டணி குறித்தான கேள்விகளின் போது  உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்பதுபோல கோபமடைந்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version