ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர் முழுவதும் தோல்வியின்றி விளையாடி, அனைத்து சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாண்ட ஆஸ்திரேலிய அணியின் செயல்பாட்டை அவர் பாராட்டியுள்ளார்.
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது சாதனையை மேலும் நீட்டிக்கும் வகையில் 7-வது மகளிர் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
151 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 17.1 ஓவர்களில் வெற்றியை எட்டியது. தொடக்க வீராங்கனை ஜார்ஜியா வோல் விரைவில் ஆட்டமிழந்தாலும், பெத் மூனி அபாரமாக விளையாடி 64 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த வெற்றி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர், “மற்றொரு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். தொடர் முழுவதும் தோல்வியின்றி விளையாடியது, பல்வேறு போட்டி சூழ்நிலைகளை சிறப்பாக சமாளித்து தொடர்ந்து நிலைத்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கான சான்றாகும். இப்படிப்பட்ட நிலைத்தன்மைதான் கோப்பைகளை வெல்லச் செய்கிறது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
151 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, பெத் மூனி மற்றும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் இணைந்து அதிரடியான கூட்டணியை அமைத்தனர். பவர் பிளே முடிவில் ஆஸ்திரேலியா 62/1 என்ற வலுவான நிலையை எட்டியது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை நாக்அவுட் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராகும்.
லிட்ச்ஃபீல்ட் 48 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பெத் மூனி 38 பந்துகளில் அரைசதம் அடித்து, மகளிர் டி20 உலகக் கோப்பையில் தனது 9-வது அரைசதத்தை பதிவு செய்து, நாட் ஸ்கிவர்–பிரண்ட் சாதனையை சமன் செய்தார். பின்னர் அவர் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் எலிஸ் பெர்ரி மற்றும் ஆஷ்லி கார்ட்னர் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கோப்பையை கைப்பற்றச் செய்தனர்.
முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் சோபி மொலினியூக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியில் ஏமி ஜோன்ஸ் (7), டேனி வையட்–ஹோட்ஜ் (8), ஆலிஸ் கேப்சி (23), ஹீதர் நைட் (2) ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நாட் ஸ்கிவர்–பிரண்ட் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்ததுடன், ஃப்ரெயா கெம்ப் 28 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து 80 ரன்கள் கூட்டணி அமைத்ததால், இங்கிலாந்து 20 ஓவர்களில் 150/4 என்ற ஸ்கோரை எட்டியது.
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் அன்னபெல் சதர்லேண்ட், சோபி மொலினியூக்ஸ், லூசி ஹாமில்டன் மற்றும் கிம் கார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
150 ரன்கள் என்ற இலக்கை எளிதாக எட்டிய ஆஸ்திரேலியா, மகளிர் டி20 உலகக் கோப்பையை மீண்டும் கைப்பற்றி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது.
