முதலமைச்சர் விஜய், கரூருக்கு செல்ல தடையில்லை எனக் கூறி திமுக தொடுத்த மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், தமிழ்நாடு முதல்வர் விஜய் மற்றும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்கள் கருத்து தெரிவிப்பதைத் தடுக்கக் கோரி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஆலோக் ஆராதே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான  திமுக மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் குமார்,  கரூர் விவகாரம் விரிவான தீர்ப்பு ஏற்கனவே உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கதைக்களத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். இழப்பீடு வழங்கும் பெயரில், நீதிமன்றம் தடை விதித்திருந்தபோதும் அவர்கள் ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் என்றார்.

அதற்கு நீதிபதி கே.வி. விஸ்வநாதன், முதல்வரின் கருத்துகள் என்னவாக இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிராக தடை உத்தரவு கோருகிறீர்களா? நீங்கள் உங்கள் கருத்தைச் சொல்லலாம். சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் ஒரு வழக்கில், அரசியல் எதிரணியினரின் கருத்துகள் குறித்து உச்சநீதிமன்றம் தொடர்ந்து உத்தரவுகளை எவ்வாறு பிறப்பிக்க முடியும்? என வினா எழுப்பினார்.

தொடர்ந்து வாதம் நடைபெற்ற நிலையில், மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

விசாரணையின்போது, இந்த மனுவை தகுதியின் அடிப்படையில்கூட (merits) தள்ளுபடி செய்ய நீதிமன்றம் முனைப்புடன் இருப்பதாக நீதிபதிகள் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, மனுதாரர் தனது மனுவை திரும்பப் பெற்றார்.

மேலும், தமிழ்நாடு முதல்வர் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதை உச்சநீதிமன்றம் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நிலுவையில் உள்ள ஒரு வழக்கில், அரசியல் எதிரணி தரப்பை இணைத்து, நீதிமன்றத்தை அரசியல் விவாதத்திற்கான மேடையாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version