தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டமன்றத் தேர்தலில் புதிய சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் (தவெக) பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 59 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் தொடர்ந்த ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு மீது பொதுமக்கள், தொழில்துறை, விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப 2026-27 நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட்டை ஆகஸ்டு 5-ம் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்ய தவெக அரசு தயாராகி வருகிறது. தேர்தல் அறிக்கையில் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் மற்றும் நிதி உதவி, விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர், ரேஷன் பொருட்கள் வீடு தேடி விநியோகம், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு துறையின் முன்னுரிமைத் திட்டங்கள், நடப்பு சவால்கள் மற்றும் புதிய திட்டங்களை விரிவாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நிதித்துறை அதிகாரிகள் பட்ஜெட் ஆவணத்தை இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சரின் ஒப்புதலுக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எனினும், அரசின் கடன் சுமை பெரும் சவாலாக உள்ளது. ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதால் நிதி நெருக்கடி தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டு (2025-26) திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.4,39,293 கோடியாகவும், வருவாய் வரவு ரூ.3,31,569 கோடியாகவும் இருந்தது. நிதி பற்றாக்குறை ரூ.1,06,968 கோடியாகப் பதிவானது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் செலவினம் ரூ.4,67,264 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.1.21 லட்சம் கோடியாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சமநிலை பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்யும் என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்த முதல் பட்ஜெட் த.வெ.க. அரசின் நீண்டகால திட்டங்களுக்கான அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
