தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைக்க விஜய்க்கு 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸிடம் த.வெ.க தலைவர்  விஜய் கோரிக்கை விடுத்ததாக அகில இந்திய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே இறுதி முடிவு எடுக்கவும் காங்கிரஸ் அகில இந்திய தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதன் எதிரொலியாக இன்று காலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றே முடிவு அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தவெகவுடன் கூட்டணி வைக்கும்பட்சத்தில் 2 அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுப்பதாகவும், விஜய் பதவியேற்பு விழாவிற்கு ராகுல்காந்திக்கு அழைப்பு விடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version