தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இந்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டு விளக்கம் அளித்தார்.
ஒவ்வொரு சிலைடாக வெளியிட்ட அவர் குட்டிக் கதையைக் கூறி அவற்றை விளக்கினார்.
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும் கடந்த திமுக ஆட்சியில் மட்டுமே தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளதாகவும், மேலும் 2021 – 2026 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் என்பது வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாகவும், ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுதாகவும் தெரிவித்தார்.
வருவாய் பற்றாக்குறை முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 28.3விழுக்காடு கடன் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர்,
இந்தியாவிலேயே தமிழ்நாட்டின்மீதுதான் கடன் அதிகமாக உள்ளதாகவும், பிறந்த குழந்தைகளுக்குக் கூட, ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
