தமிழகம் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரே இடங்களில் ஏற்படும் மின் துண்டிப்புகளை நிரந்தரமாக தடுக்க ‘ரிப்பீட் டிரிப்பிங் எலிமினேஷன் புரோகிராம் (Repeat Tripping Elimination Programme – RTEP) என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,  தமிழகத்தில் தற்போது 3.5 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோருக்கு பெரும்பாலும் தடையற்ற மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் சில துணை மின் நிலையங்கள், மின் வழித்தடங்கள் மற்றும் மின் வலையமைப்புகளில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய இடங்களை கண்டறிந்து, அதன் மூல காரணத்தை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் அதிகளவில் மின் தடை ஏற்பட்ட துணை மின் நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கென தனி பதிவேடு பராமரிக்கவும், ஒவ்வொரு மின் தடைக்கும் ‘ரூட் காஸ் அனாலிசிஸ்’ (Root Cause Analysis) மேற்கொண்டு, தற்காலிக சீரமைப்பை மட்டுமல்லாமல் நிரந்தர பொறியியல் தீர்வுகளை செயல்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின் தடை சம்பவங்கள் தொடர்பாக மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம், பாதுகாப்பு, திட்டமிடல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப பிரிவுகளும் ஒருங்கிணைந்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும், தேவையெனில் உபகரண உற்பத்தியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனையும் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவிலான நிபுணர் குழு மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) குழுவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 85 சதவீதத்திற்கும் அதிகமாக நிறைவடைந்துள்ள புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் மின் கட்டமைப்பு பணிகளை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் மின் வலையமைப்பின் நம்பகத்தன்மை அதிகரித்து, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடைகள் குறையும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version