கட்டாய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 2205-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேசும் திருவல்லிக்கேணி பள்ளியில் அதனை செயல்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது நடப்பாண்டு கூடுதல் சேர்க்கை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது எதிர்வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்றார். அதேபோன்று பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார். ஏறத்தாழ 600 கோடி ரூபாய் அளவுக்கு இன்னும் நிதி தரப்படாமல் இருப்பதை அன்பில் மகேஷ் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து முதலமைச்சர் நேரடியாக டெல்லி சென்று வலியுறுத்தி இருந்ததையும் அமைச்சர் நினைவூட்டினார்.

அப்படி இருந்தும் மத்திய அரசு இன்னும் தமிழ்நாட்டிற்கான நிதியை விடுவிக்காத நிலையில், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் மூலமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version