நார்வே செஸ் 2025 செஸ் தொடரில் தரவரிசையில் உலகின் முதலிடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை நமது தமிழக வீரர் குகேஷ் வீழ்த்தி வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அந்த போட்டியில் தோல்வியை தாங்க முடியாத ஆத்திரத்தில் கார்ல்சன் மேஜையை வேகமாக தட்டிய செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

நார்வே நாட்டில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மண்ணின் மைந்தனான மேக்னஸ் கார்ல்சனும், இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம் குகேசும் இதில் ஆறாவது சுற்றில் மோதினர். வெள்ளை நிற காய்களுடன் குகேசும், கருப்பு நிற காய்களுடன் கார்ல்சனும் களமாடினர். இதில் மிகவும் சாமர்த்தியமாக காய்களை நகர்த்திய குகேசின் வியூகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கார்ல்சன் தோல்வியைத் தழுவினார். அந்த ஆத்திரத்தில் கடைசி நகர்த்தலுக்குப் பிறகு மேஜையை வேகமாக கைகளால் கார்ல்சன் குத்தினார். இதில் ஒருசில காய்கள் பறந்து விழுந்தன. பின்னர் தன் தவறை உணர்ந்து கொண்டு காய்களை எடுத்து மேஜையில் வைத்துவிட்டு, குகேசின் தோளைத் தட்டிக் கொடுத்து களத்தில் இருந்து அவர் வெளியேறினார்.

இந்த போட்டி குறித்து பேசிய குகேஷ், 100 முறை விளையாடினால் 99 முறை தோற்றிருப்பேன், இன்று எனக்கு அதிர்ஷ்டமான நாள் என்றார். நான் அவருக்கு எதிராக தந்திரமாக காய்களை நகர்த்தினேன். ஆனால் கார்ல்சன், நேரமில்லாத நெருக்கடியில் சிக்கிக் கொண்டார். இதன்மூலம் நான் கற்றுக் கொண்டது ஒன்று என்னவெனில், நேரமில்லாத நெருக்கடியை எப்படி கையாள்வது எப்படி என்றுதான் என்று கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் குகேஷ், மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். முதலிடத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் பேபியானோ கரோனா ஆகியோர் உள்ளனர். இந்த தொடரின் முதல் சுற்றில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்திருந்த குகேஷ், நேற்றைய வெற்றியின் மூலம் அதனை ஈடு செய்து விட்டார். கிளாசிக்கல் தொடர் ஒன்றில் கார்ல்சனை, குகேஷ் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

Share.
Leave A Reply

Exit mobile version