2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தொண்டர்களிடையே உற்சாகமாக பேசினார்.
முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது.
கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி, சூலூர் சட்டமன்ற தொகுதி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, மற்றும் வால்பாறை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத்கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் கொள்கைபரப்பு துணை செயலாளர் தோப்பு அசோகன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி, உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது, வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் நமது இலட்சியம், கழக பொதுச்செயலாளர் தலைமையில் 200 தொகுதிக்குமேல் நாம் வெல்வது நிச்சயம். கோவை மாவட்டத்தில் இதுவரை அதிமுக மட்டுமே அனைத்து திட்டங்களையும், செயல்படுத்தியுள்ளது. இதுவரை மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை, மக்களிடம் வாக்கு கேட்கும் தகுதி அதிமுக தொண்டர்களாகிய உங்களுக்குதான் உள்ளது. எனவே நெஞ்சை நிமிர்த்தி மக்களை சந்தித்து வாக்காளர் படிவங்களை சரிபார்த்து உறுதிபடுத்துங்கள் என்று கூறினார். மேலும் நாளை தமிழகத்தை ஆளபோவது அதிமுகதான் எஸ்.பி.வேலுமணி உறுதிபட கூறினார்.