மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வந்த இந்த ஆட்சி எதிர்ப்போடு கிளம்பி இருக்கிறது, இதில் முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மத்திய அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் செல்லும் சிறப்பு முகாமை பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று தொடங்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், மத்திய அரசின் வீட்டு வசதி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும், பல்வேறு உதவிகள் வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
முகாம் தொடக்கத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் தமிழிசை, “கை கூப்பி நன்றி மட்டும் சொல்வதைவிட, மக்களை கைத்தூக்கி விடும் வகையில் செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மத்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டதாகக் கூறிய அவர், வாக்களித்தவர்கள் மட்டுமின்றி, வாக்களிக்காத அனைத்து மயிலாப்பூர் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இத்தகைய நடவடிக்கைகள் மக்களிடையே மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, “சரியான நேரத்தில் பதிவு செய்தால் எந்தவித தட்டுப்பாடும் இருக்காது. உலக அரங்கில் நிலவும் போர் சூழல் காரணமாக சில நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. போர் பதற்றம் குறைந்தவுடன் எரிபொருள் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணப்படும்” என்றார். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு நிலை குறித்து கவலை வெளியிட்ட அவர், இது அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். “இதை இரும்புக் கரம் கொண்டு டிஜிபி கட்டுப்படுத்துவார் என்று நம்புகிறேன். முதலமைச்சர் அறிவித்த சிங்கப்பெண் படை எப்போது செயல்படத் தொடங்கும், அவர்களுக்கு என்ன பணிகள் என்பதில் தெளிவு இல்லை” என்று கேள்வி எழுப்பினார்.
மின்வெட்டு பிரச்சனைக்கு எதிராக முதலமைச்சர் இல்லம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் தலைமைச் செயலகம் அருகே குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, “மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பொறுப்பேற்ற ஆட்சி, இப்போது எதிர்ப்புகளுக்கு மத்தியில் செயல்படுகிறது. முதலமைச்சர் இந்த விவகாரங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். தேவநேய பாவாணர் நூலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் குறித்தும் அவர் பேசினார். “எல்லா இடங்களிலும் முன்னாள் முதலமைச்சர்களின் படங்கள் நீக்கப்பட்டு தற்போதைய முதலமைச்சரின் படம் மட்டும் வைக்கப்படுகிறது. நூலகத்தில் அனைத்து அமைச்சர்களின் புகைப்படங்களும் இருக்க வேண்டும். அரசு அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். படங்களை மாற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது” என்று அவர் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் பேச்சு மற்றும் உடல் மொழி குறித்து விமர்சனம் செய்த தமிழிசை, “திருச்சியில் அவர் பேசியது பேச்சாகவே உள்ளது. முதலமைச்சராகி விட்டீர்கள் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது. அதிகாரத்துக்கு வந்த பிறகு உண்மையான முதலமைச்சராக செயல்படுகிறாரா என்பது தெரியவில்லை. பிக்கப் ஆகி, மொழி மற்றும் உடல் மொழியை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறோம்” என்றார். பி.எம். ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மும்மொழிக் கொள்கை மாநிலத்துக்கு எதிரானது அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்டினார். “மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கற்க வேண்டும் என்பதே நாங்கள் சொல்வது. எந்த அழுத்தமும் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் சேகரிப்பு விவகாரங்களில் உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, அரசு இதில் உரிய கவனம் செலுத்தி முந்தைய அரசைப் போல இல்லாமல் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாஜக தொண்டர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், “எத்தனை தோல்விகள் வந்தாலும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன், என் பகுதியில் கட்சியை வளர்ப்பேன் என்று உறுதியுடன் இருக்கும் தொண்டர்களை வணங்குகிறேன். இந்தப் பின்னடைவு தற்காலிகமானது. தொண்டர்களின் கொள்கைப் பிடிப்பும் உறுதியும் கட்சியை மீண்டும் உயர்த்தும்” என்றார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்வியை அவர் புறக்கணித்தார். இந்த முகாம் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
