பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. முதலில் திருக்குறள் வாசிக்கப்பட்டதுடன் இரங்கல் குறிப்பும் வாசிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தியதுடன், கரூர் துயரத்தில் உயிரிழந்த 42 பேருக்கும் இரங்கல் அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.
பின்னர், கேரள முன்னாள் முதலமைச்சர் வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரன், நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளார் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதேபோல் அதிமுக உறுப்பினர் டி.கே. அமுல் கந்தசாமி மறைவுக்கும் இரங்கல் கூறி தீர்மானம் வாசிக்கப்பட்டது. அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதுடன் இன்றைய கூட்டம் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நாளை 2025-2026ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவையில் அறிவிக்கப்படும் என்றும், ஒவ்வொரு நாளும் கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.