டாஸ்மாக்கில் வருவாய் சீரமைப்பு மாற்றத்தை செய்வதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு கூடுதலாக ரூ.1,200 கோடி வருவாய் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாஸ்மாக் மதுபான விற்பனையில் கணக்கில் வராமல், மறைமுகமாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணங்களைச் சீரமைத்து, அந்தத் தொகையை நேரடியாக அரசு கருவூலத்திற்கு வருவாயாக மாற்ற தமிழ்நாடு அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. இதன் மூலம் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களின் அதிகாரப்பூர்வ விலையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கப்படுவது நீண்டகாலமாக சர்ச்சையாக உள்ளது. இந்த நடைமுறை குறித்து அரசு புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இதுவரை மதுபான வகைகளுக்கு ஏற்ப, பெட்டிகளுக்கு (Cases) தலா ரூ.90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40 மற்றும் ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 வீதம் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை அரசுக்குச் செல்லாமல், தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட அமைப்புகளின் கைகளுக்குச் சென்று கொண்டிருந்ததாகப் புகார்கள் எழுந்தன.
மாதத்திற்குச் சராசரியாக 88 லட்சம் முதல் 90 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகும் சூழலில், இதன் மூலமாக மாதம் சுமார் ரூ.100 கோடி வரை கசிந்து கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இனி இந்தத் தொகையை முறைப்படுத்தி, மதுபான விற்பனை விலையிலேயே அரசு அங்கீகரிக்கும் வகையில் மாற்றியமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தச் சீர்திருத்தத்தின் மூலம், இதுவரை கசிந்து வந்த சுமார் ரூ.1,200 கோடியை ஆண்டுதோறும் அரசு நேரடியாகப் பெற்று, மாநில நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்த வழிவகை செய்யப்பட உள்ளது.
டாஸ்மாக் கடைகளில் சட்டத்திற்குப் புறம்பாகக் கூடுதலாக வசூலிக்கப்படும் தொகையைத் தடுக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்த சிக்கல்களுக்கு ஜூன் மாதத்திற்குள் உறுதியான தீர்வு காணப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் உறுதி அளித்துள்ளார்.
