கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்கும் #rajini173 படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குவது உறுதியாகி உள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘ரஜினி 173’. இப்படத்தின் இயக்குநர் குறித்த நீண்ட நாள் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குவது தற்போது உறுதியாகியுள்ளது.
அஷ்வத் மாரிமுத்துவை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் நிறுவனம் பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இப்படத்திற்கான Photoshoot நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுவீச்சில் தொடங்கத் தயாராகிவிட்டதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், சுந்தர்.சி ‘ரஜினி 173’ படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை இயக்க முடியவில்லை எனக்கூறி சில நாட்களிலேயே சுந்தர் சி அப்படத்தில் இருந்து விலகினார். சுந்தர்.சி-க்கு பிறகு ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ‘ரஜினி 173’ படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால், சில காரணங்களால் அவரும் இப்படத்தில் இருந்து விலகினார். இறுதியாக, அஷ்வத் மாரிமுத்து கூறிய கதை ரஜினிக்கு பிடித்துப் போக, அவரே இந்தப் படத்தை இயக்க இறுதி செய்யப்பட்டுள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் என இரு பெரும் ஜாம்பவான்கள் இணையும் இந்தத் திட்டத்தின் மீது ரசிகர்களுக்குப் எதிர்பார்ப்பு உள்ளது. பொங்கல் 2027-ல் படத்தை வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது ‘ரஜினி 173’ படத்தின் Photoshoot முடிந்துள்ள நிலையில், விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
