ரஷியாவின் பாதுகாப்பு சேவை (FSB) டெலிகிராம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் மீது பயங்கரவாதத்துக்கு உதவியதாக குற்றம் சாட்டி சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ரஷியாவில் பிறந்த துரோவ் தற்போது பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் குடியுரிமையுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
டெலிகிராம் ரஷியாவில் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியாக விளங்குகிறது. ரஷிய அரசு பல ஆண்டுகளாக இந்த செயலியில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சித்து வருகிறது. பயனர்களின் தரவுகளை அரசுடன் பகிர்ந்துகொள்ளவும், தடைசெய்யப்பட்ட உள்ளடக்கங்களை உடனடியாக நீக்கவும் துரோவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு ஆதரவு பெற்ற ‘MAX’ என்ற சொந்த செயலிக்கு பயனர்களை மாற்ற ரஷிய அரசு தீவிரமாக ஊக்குவித்து வருகிறது.
FSB-யின் குற்றச்சாட்டின்படி, உக்ரைன் உளவு அமைப்புகள் மற்றும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள் டெலிகிராமைப் பயன்படுத்தி ரஷியாவுக்குள் ஆட்களை பணிக்கு எடுப்பது, நாசவேலைகளை ஒருங்கிணைப்பது, படுகொலைகள் மற்றும் சைபர் மோசடிகளைத் திட்டமிடுவது ஆகியவை நடைபெறுகின்றன. இத்தகைய உள்ளடக்கங்களை நீக்க துரோவ் தரப்பு தவறியதாக FSB குற்றம் சாட்டியுள்ளது. தடை செய்யப்பட்ட தகவல்களை அகற்றாததும் முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இந்த பிடிவாரண்ட் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து பாவெல் துரோவ் தரப்பில் இதுவரை எந்தப் பதிலும் வெளியாகவில்லை. எனினும், தொடர்ச்சியான அரசியல் அழுத்தத்துக்கு மத்தியிலும் டெலிகிராம் உலக அளவில் பயனர்களை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, 2022-இல் தொடங்கிய ரஷியா-உக்ரைன் போரில் இரு தரப்பினரும் டெலிகிராமை முக்கிய தகவல் பரிமாற்ற ஊடகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது அதிகாரபூர்வ அறிவிப்புகளை டெலிகிராம் வழியாகவே வெளியிட்டு வருவது கவனிக்கத்தக்கது. இதேவேளையில், பிரான்சில் டெலிகிராமில் சட்டவிரோத உள்ளடக்கங்கள் இருப்பதாகக் கூறி துரோவ் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தகவல் சுதந்திரம் மற்றும் பயனர் தனியுரிமைக்கு இடையிலான பிரச்சினை உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
