ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால், கே.எல். ராகுல் களமிறங்கினர். தொடக்க முதலே நிதானமாக விளையாடி வந்த நிலையில் ஜெய்வால் 32 பந்துகளி 24 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சனும் 104 பந்துகளில் 84 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, நிதானத்துடன் விளையாடி வந்த கே.எல். ராகுலுடன் கில் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே நிதானமாகவும் நேர்த்தியாகவும் விளையாடிய அவர், 164 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கே.எல்.ராகுல் அடிக்கும் 12-வது சதம் இதுவாகும்.
முன்னதாக, கே.எல்.ராகுல் 16 ரன்கள் எடுத்திருந்த போது, ஆப்கானிஸ்தான் வீரர் ஜியாஉர் ரஹ்மான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆனால், ஆப்கான் அணியினர் அதற்கு ‘ரிவ்யூ’ (Review) கேட்கத் தவறியதால் அவர் அவுட் ஆகாமல் தப்பினார்.
இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் சதமடித்தார். 164 பந்துகளில் சதம் கடந்த ராகுல், துரதிர்ஷ்டவசமாக அடுத்த பந்திலேயே (165-வது பந்து) ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கில் 61 ரன்களுடனும், ரிஷ்ப் பந்த் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்திய அணி தற்போதைய நிலவரப்படி, 64 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் 2 விக்கெட்டுகளையும், ரகுமான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.
