தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்துள்ளதாக ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்திய நீட்-தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயார் என்றும், 152 வினாத்தாள் கசிவுகள் குறித்த குற்றச்சாட்டுகள் “விசாரணைக்குரிய விஷயம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு விளக்கக்காட்சியை அளித்துள்ளார். அதில் சுமார் 150 வினாத்தாள் கசிவுகள் பற்றி விவாதித்துள்ளார். இது ஒரு விசாரணைக்குரிய விஷயமாகும். பொறுப்புள்ள அரசாங்கமான நமது அரசு, இதை நிச்சயமாக விசாரித்து உண்மையை நாட்டு மக்கள் முன் சமர்ப்பிக்கும்” என்றார்.
மேலும், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அரசு விரும்புவதாகவும், விவாதம் எவ்வளவு நேரம் நடைபெற வேண்டும் என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். “நாங்கள் விவாதம் நடத்த விரும்புகிறோம். அலுவல் ஆலோசனைக் குழுவில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நீங்கள் 12 மணி நேரம் அல்லது 18 மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கும் எத்தனை மணி நேர விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று நட்டா கூறினார்.
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்றும், அவர்களின் நலனைக் காப்பது அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள கூட்டுப் பொறுப்பு என்றும் நட்டா வலியுறுத்தினார். “எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி, இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் வினாத்தாள் கசிவுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய நட்டா, ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற பல்வேறு தேர்வுகள் மற்றும் ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழக B.Ed தேர்வு முறைகேடுகள் குறித்தும் பட்டியலிட்டார்.
ராகுல் காந்தி ஏன் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடந்த முறைகேடுகள் குறித்துப் பேசுவதில்லை என்று கேள்வி எழுப்பிய நட்டா, “உங்கள் நோக்கம் மாணவர்களின் நலனோ அல்லது கல்வித் தரத்தை மேம்படுத்துவதோ அல்ல. மாணவர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல் லாபம் தேட நினைக்கிறீர்கள், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

