கர்நாடக முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்துள்ள நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தை மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது போடப்பட்ட அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கட்சித் தலைமை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சித்தராமையா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படும் வரை அவர் இடைக்கால முதலமைச்சராகத் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்தராமையாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக துணை முதலமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ளார். காங்கிரஸ் மேலிடத்தின் ஒப்புதலோடு அவர் புதிய முதலமைச்சராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது பதவியேற்பு விழா வரும் ஜூன் 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெற விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்க உள்ள நிலையில், கர்நாடக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்ய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய அமைச்சர்களில் சிலரின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என்றும், புதிய முகங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுடன் டி.கே.சிவக்குமார் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தநிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள், மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டியை கர்நாடக துணை முதலமைச்சர் பதவிக்கும், மூத்த அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரேவை அடுத்த கர்நாடக காங்கிரஸ் தலைவராகவும் பரிசீலிக்குமாறு கட்சித் தலைமையை வலியுறுத்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலாவிடம் வேண்டுகோள் கடிதத்தை சமர்ப்பித்தனர்.
