மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் 103-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திலும், சேப்பாக்கம் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகிலும் அரசியல் முக்கியத்துவமிக்க பல்வேறு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் திராவிட வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது தமிழக முதல்வர் சமீபத்தில் திருச்சியில் ஆற்றிய உரை அவரது அரசியல் இயலாமையையே காட்டுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

அதாவது, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கூர்மையான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், தமிழக முதல்வர் விஜய் இறுக்கத்துடனேயே காணப்பட்டார். அங்கு பதில் சொல்ல முடியாத கோபத்தைத்தான் திருச்சியில் நடைபெற்ற பொதுமேடையில் அவர் கொட்டியுள்ளார்.

மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட பல முத்தாய்ப்பான திட்டங்களுக்கு உண்மையான அடித்தளம் அமைத்தவர் கலைஞர் தான். பேருந்துகளை அரசுடைமையாக்கிய கலைஞரின் ஆட்சிதான் மறைமுகமாக இப்போதும் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

20 நாட்களுக்கு ஒருமுறை காகிதத்தைப் பார்த்துப் பேசும் ஒரு முதலமைச்சரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்று தமிழக மக்கள் தற்போது யோசிக்கத் தொடங்கிவிட்டனர். திருச்சி மேடையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல; அதனை மக்கள் ரசிக்கவில்லை.

எந்தவித மக்கள் போராட்டப் பின்னணியும் இல்லாமல், வெறும் சினிமா கவர்ச்சி மூலமாக மட்டுமே அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். திரைத்துறையின் ஈர்ப்பால் எனக்கு வாக்குகள் விழவில்லை என்று அவர் கூறுவது அப்பட்டமான பொய்.

மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகளில் தமிழக முதல்வர் ‘மயான அமைதி’ காப்பது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமே தவிர, நிர்வாகத் திறன் கொண்டவர் அல்ல என்பது நிரூபணமாகி வருகிறது.

இதேபோல் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிக்கும் ஒரு மறைமுக நிலைப்பாட்டில்தான் வைகோ தற்போது இருக்கிறார். குறிப்பாக, துரை வைகோ அவர்கள் விஜய்யை ‘அறிஞர் அண்ணா’ போலப் பார்க்கிறேன் என்று கூறியதிலிருந்தே, அவர்கள் தவெக பக்கம் சாயத் தயாராகிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

மதிமுகவின் இந்த நிலைப்பாடு ஆச்சரியமளிப்பதாக இல்லை, திமுகவினர் இதனை ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான். திருச்சியில் முதல்வர் குறிப்பிட்ட ‘அல்லு சில்லு’ கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் அடங்கும் என்பதை வைகோ மறந்துவிடக் கூடாது.

தன்னாட்சி, சுயமரியாதை என வாய் கிழியப் பேசும் வைகோ, கடந்த தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடாமல் ஏன் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டார் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். தனிச்சின்னத்தில் நிற்கக் கூடாது என்று அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா?

கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் பலன்களை அனுபவித்தவர் வைகோ. ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் அவர் வேறு மாதிரிப் பேசியிருப்பார். தேவை இருக்கும்போது நண்பனாகவும், தேவை முடிந்ததும் துரோகியாகவும் மாறுவதுதான் இவர்களின் அரசியல்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும், தற்போதும் அவர்கள் ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக வலம் வருகிறார்கள் என்று கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version