திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் செயற்கை நுண்ணறிவு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் குமார் ஆகியோர் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் குமார், “எனது கோரிக்கையை ஏற்றே மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் இங்கு நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, இப்பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகள் அமைத்துத் தரப்படும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஸ்ரீநாத், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை நேரடியாக கேட்டறிந்துள்ளோம். குறிப்பாக பட்டா, சாலை மற்றும் தெருவிளக்கு வசதிகள் குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். இது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் குறைகள் அனைத்தும் சரிசெய்யப்படும்” என்று கூறினார்.

கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர்கள், “மீனவர்களுக்கு என சில சிறப்புச் சலுகைகள் மற்றும் விதிவிலக்குகள் உள்ளன. அதன் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனத் தெரிவித்தனர்.

மேலும் கச்சத்தீவை மீட்பது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, அவருக்குப் பதிலாக அமைச்சர் குமார் பலமுறை ‘No comments’  எனக் கூறி அந்த கேள்வியைத் தவிர்த்தார்.

அதேபோன்று, “இந்தத் தொகுதியில் பட்டா தொடர்பான பிரச்சனைகள் பெருமளவில் காணப்படுகிறதே?” என எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அமைச்சர் குமார், மீண்டும் ‘No comments’ என்று கூறிவிட்டுச் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version