தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்குமான மிக முக்கியமான முன்னெடுப்பாக, முதலமைச்சர் விஜய், ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படையை இன்று தொடங்கி வைப்பதாக இருந்தது.

பெண்கள் அச்சமின்றி நடமாடவும், கல்வி பயிலவும், பணிபுரியவும் வழிவகுக்கும் வகையில், குற்றங்கள் நடக்கும் வரை காத்திருக்காமல், அவை நடப்பதற்கு முன்பே தடுக்கும் வகையில் இந்தப் படை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பிலேயே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி பூங்காக்களில் இந்த அதிரடிப்படை 24/7 தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளும். இப்படையின் சிறப்பு ஐஜியாக (Special IG) மூத்த ஐபிஎஸ் அதிகாரி பவானீஸ்வரி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக, ஒரு காவல் கண்காணிப்பாளர் (SP), இரண்டு துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP), நான்கு ஆய்வாளர்கள் என 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.

இப்படையினர் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள், உடலிலேயே பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் பிரத்யேகமான ரோந்து வாகனங்களுடன் களமிறங்கியுள்ளனர். அவசர உதவி எண் 100-க்கு வரும் புகார்கள் உடனடியாக இந்த அதிரடிப்படைக்கு மாற்றப்படும். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக விரைவாக பாதுகாப்பு மற்றும் உதவி கிடைப்பது உறுதி செய்யப்படும். மற்ற காவலர்களிடம் இருந்து தனித்து அடையாளம் காணும் வகையில், இந்த அதிரடிப்படைக்கு எனப் பிரத்யேக சீருடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிரடிப்படை காவல்துறை மட்டுமல்லாது, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் (NGOs) இணைந்து செயல்பட உள்ளது. இது பெண்கள் தொடர்பான சிக்கல்களுக்கு ஒரு முழுமையான தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விழா ஒத்திவைக்கப்பட்டது.

நிர்வாகக் காரணங்களால் இரண்டாவது முறையாக இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழாவுக்கான தேதி மீண்டும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version