அதிமுக அணிகள் இணைந்துவிட்டதாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, கட்சியில் அடுத்த பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சமாதானம் செய்யச் சென்ற அதிமுக மூத்த நிர்வாகிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் சோகத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் தான் தொடரப்போவதில்லை என்பதில் சி.வி.சண்முகம் மிகத் திட்டவட்டமாக இருப்பதாகத் தெரிகிறது. தன்னைச் சந்திக்க வந்த சமரசக் குழுவினரிடம், “நான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை” என்று அவர் கூறிவிட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, எஸ்பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சி.வி.சண்முகத்திடம் ஒரு சமரசத் திட்டத்தை முன்வைத்துள்ளனர். அதாவது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்குள் நாம் முறைப்படி இணைந்தாலும், கட்சிக்குள்ளேயே நாம் ஒரு தனி அணியாக செயல்படலாம் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இந்த உள்கட்சி ஃபார்முலாவிற்கு சி.வி.சண்முகம் சற்றும் உடன்படவில்லை எனத் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் தம்மால் பணியாற்ற முடியாது என்பதை அவர் அக்குழுவிடம் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். சபாநாயகரிடம் எஸ்பி வேலுமணி அளித்த கடிதத்தில் சி.வி.சண்முகம் ஏன் கையெழுத்திடவில்லை மற்றும் செய்தியாளர் சந்திப்பில் வேலுமணி ஏன் மழுப்பலாகப் பதிலளித்தார் என்பதற்கான பின்னணி இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கிடையே, சி.வி.சண்முகத்திற்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவெடுத்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மூத்த நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, தற்காலிகமாக இன்று ஒரு நாள் மட்டும் அந்த அதிரடி முடிவை அவர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

சி.வி.சண்முகத்தின் இந்த பிடிவாதமான நிலைப்பாட்டால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. விழுப்புரம் கோட்டையைத் தக்கவைக்கவும், கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுவதைத் தவிர்க்கவும், நாளை மீண்டும் சி.வி.சண்முகத்துடன் அடுத்தகட்ட சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version